மகாராஜாவின் ரயில் வண்டி அ. முத்துலிங்கம்
கீத் மில்லர் சொல்கிறார், 'உண்மையான கதைகளை எழுதவேண்டாம், யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்'. அப்படித்தான் இந்தக் கதைகளும்.
எல்லாமே உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசம் கலக்கப்பட்டவைதான். நாலுவருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை.
கணையாழி, காலச்சுவடு, இந்தியா டுடே, ஆனந்த விகடன், சதங்கை, காலம், உயிர் நிழல், அம்மா, சொல் புதிது போன்ற இதழ்களில் வெளியானவை. ஆப்பிரிக்கா, கனடா, போஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.
கடல் ஆமையின் வாழ்க்கை விசித்திரமானது. பெண் ஆமைகள் இரவில் நீந்திவந்து கடற்கரை மணலில் குழி பறித்து முட்டைகள் இட்டுவிட்டுப் போய்விடும். அதற்கு பிறகு அவை திரும்பிப் பார்ப்பதேயில்லை.
வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழி தேடி கடலில் போய் சேர்ந்து கொள்ளும்.
நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர் காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். இந்த நூல் அந்த வாசகருக்கு: அந்த உலகத்துக்கு.
Click to download.
No comments:
Post a Comment